என்னை பார்த்து,
“என்ன ஆச்சு அகல்யா. இங்க வந்திருக்க..”
“இல்ல மதர் சும்மா மனசு கொஞ்சம் சரியில்ல அதான்.” என்றேன்.
“உனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் இங்க வந்து கடவுள் முன்னாடி முறையிட்டதே கிடையாது. இப்ப என்ன புதுசா வந்திருக்கே அதான் கேக்குறேன்.. எதுவும் பிரச்சனையா?”
“அய்யோ பிரச்சனை எல்லாம் இல்ல மதர்.”
“ம்ம்.. பின்ன எதுக்கு இங்க வந்திருக்க அதுவும் பிரேயர் டைம் முடிஞ்சு வந்திருக்க.”
“இல்ல மதர் ஒருத்தர் மனச கஷ்டபடுத்திட்டேன். அது என் மனசுக்கு எப்படியோ இருந்துச்சு. அதான் இங்க வந்து முறையிட்டேன்.”
“அப்படி யார் மனச நீ கஷ்டபடுத்தியிருக்க போற.. இந்த ஹோம்ல இருக்குற எல்லாருக்கும் உன்னைய பத்தி நல்லா தெரியும்.. நீ தெரியாம பேசிட்டா கூட யாரும் பெருசு பண்ணமாட்டாங்க.”
“இங்க இருக்குற யாரையும் இல்ல மதர். அந்த இன்ஜினியர் மனச தான் ஏதோ ஏதோ பேசி கஷ்டபடுத்திட்டேன்.”
“அவர் மனசையா? அப்படி என்ன பேசின?”
“இல்ல மதர் அவர் என்னைய கல்யாணம் பண்ணிக்க ஆசை அவரோட விருப்பத்த சொன்னார்.”
“ம்ம்.. நல்ல விசயம் தான.. உனக்கு அவர பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டி தான. பாக்க ஆள் கூட நல்ல ஆள் மாதிரி தான் தெரியுது.”
“இல்ல மதர் எனக்கு விருப்பம் இல்ல. அத மட்டும் சொல்லியிருக்கனும். ஆனா நா ஏதோ ஏதோ தேவையில்லாத பேசி அவர கஷ்டபடுத்திட்டேன்.”
“அப்படி என்ன பேசுன அவர்ட்ட..” மதர் கேட்டவுடன் நான் அவரிடம் பேசியதை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தேன்..
“நா உனக்கு இப்ப ஆறுதல் சொல்றதா? இல்ல கல்யாணம் பண்ணி வாழ்க்கையில நல்லபடியா வாழ சொல்றதா? எனக்கே தெரியலம்மா.
ஏன் சொல்றேனா ஏற்கெனவே யாரோ உன்ன விட்டுட்டு போய்ட்டாங்க நீ நெனக்கிறது எனக்கு புரியது. இருந்தாலும் உன்ன கவனிச்சுக்க ஆள் வேணும்லம்மா.”
“அதலாம் அப்ப பாத்துக்கலாம் மதர்.. யாராவது ஒருத்தர் கிடைக்காமலா போய்டுவாங்க.. இல்ல கடவுள் பாத்துப்பார்..”
“கடவுள் உன்ன நல்லா பாத்துப்பார் தான்ம்மா. இருந்தாலும் என்னைய மாதிரி கஷ்டபடாம நீ சந்தோஷமா இருக்கனும்.”
“இப்ப எனக்கு என்ன குறை மதர். நா நல்லா சந்தோஷமா தான இருக்கேன்.”
“நீ இந்த விசயத்த எப்படி சொன்னாலும் கேட்கமாட்டேன் தெரியும்.. இருந்தாலும் என் மனசு என்னமோ இந்த பையன்ன கல்யாணம் பண்ணிகிட்டா நல்லது.. உனக்கும் வாழ்க்கை கிடைச்ச மாதிரி இருக்கும்.. இங்க இருக்குறவங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும் நெனச்சேன்.. ம்ம்.. இது உன்னோட வாழ்க்கை நீ தான முடிவு பண்ணனும். நீயே முடிவு பண்ணிக்கோம்மா. நா வரேன்” மதர் சொல்லிட்டு போக கொஞ்சம் விலகியிருந்த குழப்பம் மீண்டும் என் மனதை வந்து ஆட்கொண்டுவிட்டது.
அடுத்து என்ன செய்வது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். அன்று இரவு சாப்பாடு, தூக்கம் எதுவுமே பிடிக்கவில்லை. இப்போது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று கூட தெரியாமல் அப்போது மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். ஒன்று மட்டும் புரிந்தது எனக்கு முன்னால் இருந்தது வாழ்க்கையின் இரண்டு பாதைகள். ஒன்று என் வாழ்க்கையில் திருமணமே செய்யாமல் இப்படியே சுலநலமாக வாழ்வது. இன்னொன்று அவரை திருமணம் செய்துக் கொண்டு இங்கிருப்பவருக்கு உதவியாக வாழ்வது. இதில் எதை தேர்ந்தெடுக்க என எனக்குள் பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தேன். அப்போது யோசித்து பார்த்தேன் ஆனால் பதில் தெரியவில்லை. அந்த இரவு எப்போது தூங்கினேன் என தெரியவில்லை.
மறுநாள் காலையில் சூரிய வெளிச்சம் வந்து கண்ணில் பட்டு கூச உடனே எழுந்து மணியை பார்த்தேன். ஏழு மணியை தாண்டியிருந்தது. வேகமாக வேகமாக என் வேலைகளை எல்லாம் ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கட்டடம் கட்டும் இடத்திற்கு சென்று பார்த்தேன். ஆட்கள் எல்லோரும் வந்து அவர்களின் வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதுவரை எத்தனையோ கான்ட்ராக்டர்கள் ஆட்களை கூட்டி வந்து இங்கு வேலை பார்த்திருக்கின்றனர். அவர்கள் எல்லாம் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு நாட்களை கடத்தி தான் வேலையை முடித்திருக்கின்றனர். இவர் கூட்டி வந்த ஆட்கள் தான் அவரவர் பொறுப்புணர்ந்து வேலை செய்திருக்கின்றனர். இப்போது அவரை என் கண்கள் தேடியது. ஆனால் அவரை மட்டும் காணவில்லை. அதற்கு காரணம் நானா இல்லை வேறு ஏதாவது வேலையா என தெரியவில்லை. அன்று மட்டுமல்ல கட்டிட வேலையின் கடைசி நாளும் அவர் வரவே இல்லை. அது என் மனதிற்கு வருத்தமாக தான் இருந்தது.
அகல்யாவின் பார்வையிலே கதை தொடர்கிறது…
அன்று புதிதாக கட்டிய கட்டிடத்தை திறந்து வைக்க சில முக்கிய நபர்களை ஹோமிலிருந்து அழைத்திருந்தனர். அதில் அரசியல் பிரமுகர்களும் இருந்தனர். ஒரு ஓரமாக இந்த கட்டிடத்தை கட்டி கொடுத்த அவருடைய ஆட்களும் நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களையும் அழைத்திருந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு காரணம் இவர்களை அழைத்திருந்தால் கண்டிப்பாக அவரையும் அழைத்திருப்பார்கள் என என் மனம் வேகமாக சிந்தித்து செயல்பட்டு கண்கள் அவர் எங்கு நிற்கிறார் என சுற்றிலும் தேடியது.
அந்த சமயம் பார்த்து மதர் என்னை கூப்பிட முதல் முறையாக அவர்கள மீது கொஞ்சம் எரிச்சல் வந்தது. என் மனநிலை புரியாமல் கூப்பிடுகிறார்களே என நொந்துக் கொண்டேன். இருந்தாலும் அவர்களின் மீது வைத்திருந்த மரியாதைக்காக மதர் இருக்கும் இடத்தில் போய் நிற்க அவரை அங்கிருந்த ஒரு முக்கிய அரசியல்வாதியிடம்
“இது அகல்யா.. இங்க தான் வளந்தா.. இப்ப இவளும் இந்த ஹோமை பொறுப்பா பாத்துக்கிறா.. எனக்கு பிறகு இவ தான் பாத்துக்கிற மாதிரி வரும்.. உங்க சைடுல இருந்து ஏதாவது பண உதவி பண்ணினா நல்லா இருக்கும்.” சொல்ல
அந்த அரசியல்வாதி என்னை காம பார்வையுடன் பார்த்துக் கொண்டே
“இங்க வந்தது மனசுக்கு நிம்மதியா இருக்கு.. மனசுக்கு பிடிச்ச ஆட்களாக இருக்காங்க. அதுக்காகவே பெருசா செஞ்சிடுறேன்.” என்றார்.
எனக்கு அவரின் பார்வையும், பேச்சும் சுத்தமாக பிடிக்கவில்லை. அதனாலே அந்த அரசியல்வாதியை பார்க்க பிடிக்காமல் தலையை குனிந்தபடி நின்றுக் கொண்டிருந்தேன். எப்போது அந்த இடத்தை விட்டு நகருவேன் என்றிருந்தது. நல்ல வேளை சிறிது நேரத்தில் அந்த அரசியல்வாதி நகர்ந்து செல்ல அப்போது தான் எனக்கு நிம்மதியை வந்தது. அவர் என்னை கடந்து செல்லும் போதும் அதே காம பார்வையுடனே கடந்து சென்றார்.. இந்த அரசியல்வாதிகளுக்கு இது வேலை தான் போல் என நானாக மனதில் நினைத்துக் கொண்டேன்..
அந்த அரசியல்வாதி சென்றதும் மீண்டும் என் கண்கள் அவரை தேட ஆரம்பித்தன. அவர் கூட்டி வந்து வேலையாட்கள் எல்லோரும் இருந்தனர். ஆனால் அவரை மட்டும் காணவில்லை. நான் பேசியது பிடிக்காமல் தான் வராமல் இருக்கிறாரோ என தோன்றியது. அது தான் காரணமாக இருக்கும் என மனது கிட்டதட்ட முடிவே பண்ணிவிட்டது. இருந்தாலும் கடைசியாக அந்த வேலையாட்களிடம் வேண்டுமானால் கேட்டு பார்க்கலாம் தோன்றியது.. என் கால்கள் வேகமாக அந்த வேலையாட்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தது. அவர்கள் அனைவரும் என்னை பார்த்ததும் மரியாதைக்காக எழுந்து நின்றனர்..
“அந்த சார் ஃபங்க்சனுக்கு வரலியா?” கேட்க அங்கிருந்தவர்களில் ஒருவர்
“எந்த சார் மேடம் கேட்க?”
“உங்கள எல்லாம் இங்க வேலை பாக்க சொன்ன இன்ஜினியர் சார் தா கேக்குறேன்.”
“தெரியல மேடம்.. நாளைக்கு இங்க பங்க்சன் எல்லாரும் போய்டுங்க மட்டும் அவரிட்ட இருந்து தகவல் வந்துச்சு.. மத்தபடி என்ன விவரம் எங்களுக்கு தெரியல.. அப்படி தானப்பா” மற்ற எல்லோரையும் கேட்க அவர்களும் ‘ஆமா’ என ஆமேத்தினர்..
“சரி அந்த சார் நம்பர் இருக்கா?” கேட்டேன்..
“இருக்கு மேடம்.” சொல்லிட்டு அந்த ஆள்
“எதுக்கு கேக்குறீங்க மேடம்?” கேட்க ஒருவினாடி சப்தநாடியும் நின்று போனது போல் ஆகிவிட்டது.. பின் நானே சுதாரித்து
“அடுத்த கான்ட்ராக்ட் பத்தி மதர் பேச கூப்பிட்டு வர சொன்னாங்க.. இங்க தான் அந்த சார் இல்லீயே.. அதான் நம்பர் இருந்தா குடுங்க.. நானே கால் பண்ணி பேசிக்கிறேன்.” என்றேன்.
முதன்முறையாக அந்த ஒற்றை ஆணுக்காக என் வாயில் இருந்து பொய் வந்திருக்கிறது. ம்ம்.. இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறாரோ யாருக்கு தெரியும் என மனதில் நினைத்துக் கொண்டேன்.
அதற்குள் அங்கிருந்த ஒருத்தர் அவரின் நம்பரை சொல்ல படபடவென மொபைலை ஆன்லாக் செய்து அவர் சொன்ன நம்பரை டைப் செய்து டயல் செய்ய ரிங் ஆனது.. நம்பர் சொன்ன நபரிடம் “ரொம்ப தாங்க்ஸ்” சொல்லிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
மறுமுனையில் கால் அட்டன் செய்ததும் என் இதயம் படபடவென அடித்தது. அவரிடம் என்ன பேசுவது எதை பற்றி பேசுவது என ஒன்றும் தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். ஏதோ ஒரு வேகத்தில் நம்பரை வாங்கி காலும் பண்ணிவிட்டேன். இப்போது அவர் காலையும் அட்டன் செய்தும் விட்டார் என மனதிற்குள் இந்த சில வினாடிகளில் போராட்டம் நடந்துவிட்டது. அவரிடமிருந்து ‘ஹலோ’ என்ற வார்த்தை என் காதில் வந்து விழுந்தது. அவரின் இந்த மென்னையான குரலை இரண்டு நாட்கள் கேட்காமல் இழந்து விட்டேனே என்ற வருத்தம் வந்து எட்டி பார்த்தது.
மறுபடியும் அவரிடமிருந்து,
“ஹலோ யார் பேசுறீங்க.? என்ன வேணும் டக்குனு சொல்லுங்க டிராபிக் சிக்னல் நிக்குறேன்” என்றார்.. ஒருவேளை இங்கு தான் வந்து கொண்டிருப்பாரோ என்று கூட தோன்றியது. நான் எந்த பதிலும் பேசாததால் அவரே அதற்குள் “நா அப்பறம் கூப்பிடுறேன்” என சொல்லி காலை கட் செய்தார். அவராக கூப்பிடுகிறேன் சொன்னதால் அதற்கு மேல் நான் கால் பண்ணவில்லை. அவரின் போன் காலோடு வருக்கைக்கும் சேர்த்து காத்திருந்தேன். அந்த காத்திருப்பில் அவரை பற்றிய நினைவுகளில் மூழ்கி போனேன். அதில் அவர் உள்ளே நுழைந்து வருவதை கூட கவனிக்காமல் அவரை பற்றிய மயக்கத்திலே இருந்திருக்கிறேன் என்றால் இந்த இரண்டு நாட்களில் அவர் என் மனதை எவ்வளவு தூரம் மாற்றி இருக்கிறார் என பார்த்துக் கொள்ளுங்கள்.
மதர் வந்து “ஹே அகல்யா என்ன ஆச்சு?” என் தோளை தட்டி கூப்பிட்டதும் தான் இந்த உலகத்திற்கு வந்தேன்.. எனக்கு முன்னால் தான் அவர் மதருடன் சென்றுக் கொண்டிருக்கிறார்.. இந்த சமயம் அவரை தனியாக கூப்பிட்டு எப்படி பேசுவது என யோசிக்க ஆரம்பித்தேன். அந்த ஹோமில் சாப்பிடுவதற்கு முன் பிரேயர் அதாவது சாமி கும்பிட்ட பின் சாப்பிடுவது தான் வழக்கம்.. இப்போது அதற்கு தான் அந்த இருவரும் சென்றுக் கொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களின் பின்னால் தொடர்ந்து சென்றேன். எல்லோரும் சாமி கும்பிடும் சமயத்தில் அவரிடம் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என என் மனம் துடித்துக் கொண்டிருந்தது.
