பயணம் ஆரம்பித்தது 62

மும்பை இரயில் நிலையம். சென்னை செல்லும் விறைவு ரயில் கிளம்ப தயாராக நின்றுகொண்டிருந்தது. கஸ்தூரியும் அவள் மகன் ராகவனும் கையில் கனமான பெட்டியுடன் அவசர அவசரமாக நடந்து unreserved compartmentஐ தேடி கண்டுபிடித்தார்கள். பண்டிகை காலமாக இருந்ததால் எல்லா சீட்டிலும் ஆட்கள் அமர்ந்திருந்தது மட்டுமல்லாமல் நிறையபேர் நின்றுகொண்டும் நடக்கும் பாதையில் அமர்ந்தும் இருந்தார்கள். ராகவனால் எவ்வளவு முயன்றும் உள்ளே நுழையகூட முடியவில்லை.

“இஸ் கம்பார்ட்மெண்ட் பில்குள் ஃபுல் ஹை. ட்ரைன்கி பெஹ்லி தோ கம்பார்ட்மென்ட் unreserved. உதர் ஜாகே தேக்” என்றான் அங்கு நின்று கொண்டிருந்தவன்.

“டேய் ராகவா… என்னடா சொல்லுறாரு இவுரு?” கஸ்தூரி மகனிடம் கேட்டாள்.

“இந்த கம்பார்ட்மெண்ட் மொத்தமும் ஃபுல்லா ஆயிடுச்சாம். ட்ரைனோட முதல் ரெண்டு கம்பார்ட்மெண்ட் unreservedடாம். அங்க இடம் இருக்கான்னு பார்க்க சொல்லுறான்.”

“சரி வாடா சீக்கரமா போயி அந்த கம்பார்ட்மெண்டும் புல் ஆகிறதுக்கு முன்னால போயி இடம் பிடிக்கலாம்” என்று சொல்லி ரயிலின் முன் பகுதிக்கு வேகமாக நடந்தார்கள்.

“என்னடா இது இத்தனை பெட்டிங்க இருக்கு. இதெல்லாம் கூட்டம் கம்மியா இருக்கேடா?”

“இதெல்லாம் ரிசர்வ்ர்டும்மா. நாம ஏறுனா இறக்கிவிட்டுடுவாங்க இல்ல எக்கச்க்கமா ஃபைன் போடுவாங்க”.

“இத்தனை பெட்டி இருக்கு அத்தனையும் ரிசர்வ்டா? இது என்ன அநியாயமா இருக்கே” என்று புலம்பியபடி ஓட்டமும் நடையுமாக ராகவனை பின் தொடர்ந்தாள்.

“சாதாரணமா கிளம்புனா நாமளும் ரிசர்வ் பண்ணிட்டு வந்திருக்களாம். இப்ப திடிர்ன்னு கிளம்பவேண்டியதாயிடுச்சு. இந்த கூட்டத்துல உங்களை எப்படி கூட்டிகிட்டு ஊர்போயி சேரப்போறேன்னு தெரியலையே.”

நடந்து கொண்டிருக்கும்போதே ராகவனின் செல்போன் அடித்தது. ராகவனின் தம்பிதான் கூப்பிட்டான். ராகவன் போனை எடுத்து பேச ஆரம்பித்தான்.

“நாங்க ஸ்டேஷன் வந்திட்டோம். ட்ரையின் ஏறப்போறோம். ரொம்ப கூட்டமா இருக்கு. எப்படியும் வந்திடுவோம். எப்படியிருக்காரு?” என்றான்.

மறுமுனையில் ஏதோ பதில் வர, “உம்… உம்… அப்படியா?… ஓ இப்பதான் இதெல்லாம் தெரியிதாமாம் அவருக்கு…” என்று பேசிக்கொண்டே நடக்க, கஸ்தூரி, “யாருடா பேசுறா? சின்னவனா?” என்று கேட்க, ராகவன் தலையாட்டிக்கொண்டே நடந்தான்.

“போனக்குடுடா” என்று சொல்லி அவன் கையிலிருந்து போனை பிடிங்கி இவள் பேச ஆரம்பித்தாள்.

“என்னடா? என் சேதி?… அதெல்லாம் ஒன்னு ஆகாது. நாங்க வந்திடுறோம். நீ தைரியமா இரு.” பேசிக்கொண்டே நடந்தாள். இவளது நடையின் வேகம் கம்மியாக இருக்க, “அம்மா, நீ மெதுவா நடந்து வர்றதுக்குள்ள அங்க எல்லா சீட்டும் நிறைஞ்சிடும். நான் முன்ன போயி இடம் பிடிக்கிறேன். நீ சீக்கரம் வா” என்று சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தான்.

போன் பேசியபடி நடந்துகொண்டிருந்த கஸ்தூரி பாதையில் யாரோ வைக்கப்படிருந்த சூட்கேசை கவனிக்காமல் காலில் பலமாக இடித்துக்கொண்டாள். “ஐய்யோ” என்று கத்திக்கொண்டே போனை கீழே போட்டுவிட்டு, கீழே உக்கார்ந்து காலை பிடித்துக்கொண்டாள். வலி உயிர் போனது.

அவள் இடித்துக்கொண்டதை பார்த்த ஒரு பயணி ஓடிவந்து, “அரே க்யா கர்தியா ஆப்? சம்பால்கே ஆனா சாயியேனா? க்யா ஹூவா?” என்று சொல்லி அவள் கீழே போட்ட போனை எடுத்து அவளிடம் தந்து பக்கத்தில் நின்றார்.

“இல்லங்க பாக்காம நடுந்துவந்து இடிச்சிக்கிட்டேன்” இவளுக்கு தெரிந்த ஒரே மொழி தமிழில் சொல்ல…

“ஓ… நீங்க தமிழா? ஏம்மா பாத்து வரக்கூடாதா? இப்படி இடிச்சிகிட்டீங்களே? எந்திரிங்க… வாங்க இப்படி பெஞ்சில உக்காருங்க” என்று அவளுக்கு கைகுடுத்து தூக்கினார்.

“இல்லங்க உக்கார நேரம் இல்லை். நானும் போகணும். ட்ரைன் கிளம்புற நேரம் ஆயிடுச்சே. சீக்கரம் போனாதான் unreservedல சீட்டு பிடிக்கமுடியும். ”

“இனிமேல் அங்க நீங்க போனாலும் இடம் கிடைக்காது. கூட்டம் அதிகமா இருக்குன்னு இப்பதான் இன்னோரு கம்பார்ட்மென்ட் சேர்த்தாங்க. சேர்த்தவுடனே அதுவும் ரொம்பிடுச்சு. ரிசர்வ் பண்ணிட்டு வந்திருக்கலாமே. இப்ப பன்டிகைக்காலம் வேற…” என்று அவர் சொல்ல கஸ்தூரிக்கு பகீர் என்றது. இப்ப எப்படி ஊருக்கு போறது என்ற கவலை அவளை சோகப்படுத்தியது.