சில நொடிகளுக்கு அவன் பிடியில் சொக்கிக் கிடந்தாள் 9 41

ரேவதி வீட்டில் இல்லை. அவளை ஆஸ்பத்ரி கொண்டு போயிருந்தார்கள். நவநீதன் உடனே வீட்டுக்கு திரும்பி.. ஆஸ்பத்ரி கிளம்பி விட்டான்.! ஆஸ்பத்ரி வராண்டாவிலேயே இறுகின முகமாக நின்றிருந்தான் பிரேம். வேகமாக அவன் அருகில் போய் அவன் கையைப் பிடித்தான் நவநீதன்.
”இப்ப எப்படி இருக்கு ?”
” ம் ” என முனகினான். அவன் கண்கள் கலங்கியிருந்தது.
” எப்ப நடந்தது இது. ?”
” காலைலதான். ஆறு மணிக்கு பண்ணியிருக்கா ”
அவன் குரல் கரகரப்பாக வந்தது.
” ஒண்ணும் பயமில்லையே ?”
” இல்ல.. ”
பிரேமின் தோளில் கை வைத்தான்.
” வயிறு கழுவிட்டாங்களா ?”
” ம் ”
” பாக்கலாமா ?”
” இருக்கா.. போய் பாரு ”
” தைரியமா இரு.. வா ” என பிரேமையும் அழைத்தான்.
” நீ போய் பாத்துட்டு வா. என்னால அவளை பாக்க முடியல. ”
” ஒண்ணும் ஆகாதுடா. பயப்படாத..” என தட்டிக் கொடுத்து விட்டு.. நவநீதன் நகர.. உள்ளிருந்து பிரேமின் அப்பா இறுகிய முகமாக வெளியே வந்தார்.
” இந்த முண்டைகள எல்லாம் பெத்து வளத்து ஆளாக்காம அன்னிக்கே கொன்னு வீசிருக்கலாம் ” என அவருடைய ஆதங்கத்தை கொட்டினார்.
உள்ளே போனான் நவநீதன். வார்டின் கடைசியிலிருந்து இரண்டாவது பெட்டில் இருந்தாள் ரேவதி. அவளைச் சுற்றிலும் ஐந்தாறு பேர் நின்று கொண்டிருந்தார்கள். அதில் அவளது அம்மாவும் ஒருத்தி.! அவளுக்கு குளுகோஸ் இறங்கிக் கொண்டிருந்தது. !

நவநீதனைப் பார்த்ததும் வறட்சியான ஒரு புன்னகையைக் காட்டினாள் ரேவதி.
” ஹாய் டா பையா..” என முனகினாள்.
” போட்டன்னா ஒண்ணு..”
” போடு ” சிரித்தாள் ”என்னடா வெறும் கையோட வந்துருக்க .?”
” தப்புதான். இரு போய் பால்டாயில் ரெண்டு லிட்டர் வாங்கிட்டு வரேன்..!”
” சீக்கிரம் செய்.. உனக்கு புண்ணியமா போகும் ” என்று சிரிப்பு மாறாமலே சொன்னாள்.
” என்ன காரியம் பண்ணியிருக்க நீ.. உன்னல்லாம்… ”
” நான்தான் சாகல இல்லடா.. ?”
” லூசாக்கா நீ..? என்ன ஒரு பைத்தியக் காரத்தனமான காரியத்தை பண்ணியிருக்க நீ..? ஏன் இப்படி பண்ண.. ?”
” நீதான்டா பாக்கி.. கேட்டுட்டியா.?” என அவள் சிரிக்க.. சுற்றி இருந்தவர்களும்.. ரேவதியின் அம்மாவும் அவளை கண்டபடி திட்டத் தொடங்கினார்கள். ஆனால் ரேவதி அதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை. ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து ரேவதியின் அம்மாவிடம் கேட்டான் நவநீதன்.
” என்னக்கா நடந்துச்சு ?”
” என்னை கேளுடா பையா.. நானே சொல்றேன் ” என்று புன்னகைத்தாள் ரேவதி ”தேவை இல்லாம எங்கம்மாளை ஏன் கேள்வி கேட்டு கண்ணீர் விட வெக்கற..?”
” நான் உன்கூட இப்ப பேசவே தயாரில்ல.. வாய மூடு.. ” என்றான் ”ரெடியாகி வா.. அப்பறம் இருக்கு உனக்கு ”
” இப்ப என்னடா ஆகிப் போச்சு அப்படி..?”
” நேத்து நைட்டு கூட என்கிட்ட நல்லாத்தான பேசின. ?”
” ஏன் இப்ப கூட நல்லாத்தான்டா பேசறேன்..? அழறேனா பாரு..? இல்லதான..?”
” பண்றதையும் பண்ணிட்டு.. எவ்ளோ ஜாலியா சிரிச்சு நெக்கலடிச்சிட்டு இருக்க.. ?”
” அதுக்காக.. குமுறி குமுறி அழுதா.. எல்லாம் சரியா போகுமா ?”
” ஓ.. அப்ப இப்படி அரளி விதை அரைச்சு குடிச்சா மட்டும் சரியா போகும்னு யாரு சொன்னது உனக்கு..?”
” யாரும் சொல்லல.. எனக்கா தோணுச்சு அப்படி.. ”
” வீட்டுக்கு வா.. அப்பறம் இருக்கு உனக்கு.. ”
சிரித்தாள் ”துணிந்தவளுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தைடா.. பையா..”

நிச்சயமாக அவள் உள்ளுக்குள் உடைந்து போயிருக்கிறாள் என்பதை அவனால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதை உள்ளே மறைத்துக் கொண்டு எதுவுமே நடக்காததை போல.. கிண்டலும் கேலியுமாகப் பேசவும் ஒரு பக்குவம் வேண்டும். அது ரேவதிக்கு இருக்கிறது என்று நம்பினான் நவநீதன்..!!!

பிரேமிடம் போனான் நவநீதன். பிரேம் இன்னும் மனம் உடைந்த நிலையில்தான் இருந்தான்.
” தண்ணியடிக்கலாம் வாடா ” என நவநீதனை அழைத்தான் பிரேம்.
உடனே மறுத்தான் நவநீதன்.
” வேணாண்டா..”
” எனக்கு அடிச்சே ஆகனும்டா.. வா ”
”டேய் சொன்னா கேளு நீ இந்த நெலமைல தண்ணி அடிக்க வேண்டாம் .”
” என்னடா பெரிய நிலமை ? வாடா பேசாம..”
”நீ தண்ணி போட்டா சும்மாருக்க மாட்ட.. டென்ஷனாவ.. அப்பறம் சண்டை வரும்.. ”
” இல்லடா. நான் சண்டை எல்லாம் போட மாட்டேன் வா..”
” வேணாண்டா பிரேம். சொன்னா கேளு.. ! உங்கக்கா வீட்டுக்கு வந்துரட்டும் அப்பறம் அடிச்சிக்கோ..”
” டேய்.. நான் இப்ப இருக்கற நிலமைல தனியா போய் தண்ணியடிச்சன்னாதான் பிரச்சினை. நெஜமா கொலை வெறில இருக்கேன். நேரா போய் அவனை கொன்னாலும் கொன்றுவேன். நீ என் கூட இரு.. அப்பதான் என்னை கண்ட்ரோல் பண்ண முடியும் ” என வற்புறுத்தி நவநீதனை அழைத்துப் போனான் பிரேம்.