“உன் புருஷன் உன் மேல வச்சிருக்குற லவ்..!!” அவர் சொன்னதைக்கேட்டு நான் திகைத்துக் கொண்டிருக்க, அவரே தொடர்ந்தார்.
“அசோக் ரெண்டு நாள் முன்னாடி கால் பண்ணி.. நெறைய திங்க்ஸ் வாங்கிட்டு வர சொன்னான்..!! ஆனா.. அதுல ஒண்ணுகூட அவனுக்காக வாங்கிட்டு வர சொன்னது இல்லை.. எல்லாமே உனக்காகத்தான்..!! ‘இந்த மாதிரி இருந்தாத்தான் பவிக்கு புடிக்கும்.. அந்த மாதிரி இருந்தாத்தான் பவிக்கு புடிக்கும்.. பாத்து வாங்குங்க பாலமுரளி..’ அப்டின்னு ஒரு அரை மணி நேரம் என்னை டார்ச்சர் பண்ணிட்டான்..!! ஹ்ஹ்ஹாஹ்ஹா…!!”
அவர் முகமெல்லாம் சிரிப்பாக சொல்ல, எனக்கு கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. அழுதுவிடாமல் இருக்க பெரிதும் முயல வேண்டியிருந்தது. பற்களை அழுத்திக் கடித்து, வந்த அழுகையை கட்டுபடுத்தினேன். அவர் அப்புறமும் அசோக்கைப் பற்றி நிறைய பேசினார். அசோக்குடைய இரக்க குணம், நகைச்சுவை உணர்வு, தொழில் நுட்ப அறிவு, வேலை மீது பக்தி, நண்பர்களுக்கு தரும் முக்கியத்துவம், எல்லாவற்றையும் விட அசோக் என் மீது வைத்திருந்த எக்கச்சக்க காதல்..!!
அவர் சொல்ல சொல்ல, என் மனசாட்சி எல்லாவற்றையும் தலையாட்டி ஆமோதித்தது. உள்ளத்துக்குள் என் கணவர் மீதான காதல் ஊற்று ஒன்று உடனடியாய் உற்பத்தியாகி பொங்க ஆரம்பித்தது. அவர் என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நேற்று எண்ணினேன். ஆனால் அவருடைய அன்பை நான்தான் புரிந்துகொள்ளவில்லையோ என என்னை நானே திட்டிக் கொண்டேன்.
கொஞ்ச நேரம் சென்று அவர்கள் கிளம்பியதும், நான் அந்தப் பையை பிரித்துப் பார்த்தேன். அவர் சொன்னது உண்மைதான்..!! அத்தனையும் எனக்கான பொருட்கள்..!! மலிவான விலை பொருட்களிலிருந்து.. காஸ்ட்லி சமாச்சாரங்கள் வரை.!! அத்தனையும் அசோக் என் மீது வைத்திருந்த அக்கறையும் அன்பும்..!!
‘மார்னிங்லாம் ரொம்ப குளிரா இருக்குதுப்பா.. எந்திரிக்க கஷ்டமா இருக்கு..’ – ஸ்வெட்டர் இருந்தது..!!
‘ஹாஹா.. பிடிக்காதுன்னு யாராவது சொல்வாங்களா..? எவ்ளோ கொடுத்தாலும் சாப்பிடுவேன்..’ – பெட்டி பெட்டியாய் சாக்லேட்கள்..!!
‘இது பேட்டரி போயிடுச்சு போலங்க.. ஓடவே மாட்டேன்னுது..’ – வெண்ணிற கற்கள் ஜொலிக்கும் அந்த ரிஸ்ட் வாட்ச்..!!
எனக்கு பாட்டை பாக்குறதை விட.. கேக்குறதுதான் ரொம்ப பிடிக்கும்..’ – கையகலத்தில் ஒரு ஐபாட்..!!
இன்னும் நிறைய பொருட்கள்..!! எப்போதோ நான் கேட்ட அல்லது கேட்க நினைத்த பொருட்கள்..!! எல்லாமே எனக்கு பிடித்த மாதிரி.. எனது ரசனை தெரிந்து பொறுக்கியெடுத்த மாதிரி..!! எல்லாப் பொருட்களையும் நான் தொட்டுப் பார்த்தேன்.. எனது கை விரல்களை மெல்ல அந்த பொருட்கள் மீது ஓடவிட்டேன்..!! என் மீது எவ்வளவு காதலும், கவனமும் கொண்டிருந்தால்.. என் கணவர் இவையெல்லாம் வீட்டுக்கு கொண்டுவந்திருப்பார்..?
மனதுக்குள் என்னவர் மீதான காதல் பீறிட்டு கிளம்பியது..!! உடனே அவரிடம் பேச வேண்டும் போலிருந்தது..!! மன்னிப்பு கேட்டு அழலாமா..??? இல்லை இல்லை.. வேண்டாம்..!!! அப்புறம் அதையே லைசென்சாக எடுத்துக்கொண்டு எல்லா பெண்களிடமும் பேச ஆரம்பித்து விட்டால்..?? ரொம்பவும் இறங்கிப் போகவேண்டாம்..!! கோவம் போய்விட்டது என்று மட்டும் காட்டிக் கொள்ளலாம்..!! நான் பேசிய விதம் தவறு என்று மட்டும் ஒத்துக் கொள்ளலாம்..!!
செல்போன் எடுத்து அவருக்கு கால் செய்தேன். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. மணி பார்த்தேன். ஒன்பதை தாண்டியிருந்தது. ப்ரசன்டேஷன் ஆரம்பித்திருக்கும் போலிருக்கிறது..!! சரி.. அப்புறம் பேசிக் கொள்ளலாம்..!!
பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்துவிட்டு, வேறு வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன். வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்தேன். இரவு ஆக்கி வைத்திருந்த உணவை கீழே கொட்டிவிட்டு, பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைத்தேன். பதினொரு மணி வாக்கில் ரேணுகாவும், அவள் கணவரும் வந்து ஊருக்கு கிளம்புவதாக சொல்லிவிட்டு சென்றார்கள். காரில் சென்றவர்களுக்கு ஜன்னல் வழியாக கைகாட்டி வழியனுப்பினேன்.
பசி வயிற்றை கிள்ளியது. கொஞ்சமாய் பருப்பு வேகவைத்து நெய் ஊற்றி சாப்பிட்டேன். டிவி ஆன் செய்து சோபாவில் அமர்ந்தேன். அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே குமட்டிக்கொண்டு வந்தது. பாத்ரூம் சென்று வாந்தியெடுத்தேன். உள்ளே சென்ற அத்தனையும் வெளியே வந்துவிட்டன. அதோடு சேர்ந்து சிறுகுடலும், பெருங்குடலுமே வெளியே வந்து விழுகிற மாதிரி அப்படி ஒரு வாந்தி…!! கண்களும் சிவந்து போய் பொலபொலவென நீரைக் கொட்டின. முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தபோது, கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அப்படியே மெத்தையில் விழுந்தேன். மயங்கிப் போனேன்..!!
எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தேன் என்று தெரியவில்லை. கண்விழித்தபோது மிகவும் களைப்பாக உணர்ந்தேன். உடம்பின் ஒவ்வொரு அணுவும் விண்விண்னென வலித்தன. தட்டுத்தடுமாறி எழுந்து கிச்சன் சென்றேன். ஃப்ரிட்ஜ் திறந்து ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து ஒரு டம்ளர் அருந்தினேன். பழச்சாறு பாய்ந்ததும், உடல் சற்றே தெம்பாக இருந்தது..!!
இதயத்தில் எழுந்த படபடப்பு என்னவோ இன்னும் குறையவில்லை. மனதில் இப்போது ஒரு இனம் புரியாத பயம் படருவதை உணர முடிந்தது. இதே மாதிரி மயக்கம் வந்து, வேறெங்காவது விழுந்து கிடந்தால்..? அவர் வேறு ஊரில் இல்லை.. ரேணுகாவும் அருகில் இல்லை..!! உதவி கேட்டு நான் எழுப்பும் குரல் கூட, யார் காதிலாவது விழுமா என சந்தேகம் வந்தது.
பேசாமல் நானும் கிளம்பி ஊருக்கு சென்று விடட்டுமா..? செங்கல்பட்டு போய் விட்டால் ஸேஃப் என்று தோன்றியது. அம்மாவையும் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. அவர் வரும் வரை இரண்டு நாட்கள் அங்கே இருக்கலாம்..!! அம்மாவின் சமையலை உண்டு.. உறங்கி.. நிம்மதியாய் ஓய்வெடுத்துவிட்டு வரலாம்..!!
யோசனை வந்த சில நிமிஷங்களிலேயே நான் செங்கல்பட்டு கிளம்பினேன். இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டும் ஒரு பெட்டியில் திணித்து எடுத்துக் கொண்டேன். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். மெயின்ரோட் சென்று ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டேன். தாம்பரம் வந்து, தயாராய் நின்றிருந்த ஒரு பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டேன். பயணச்சீட்டு வாங்கி பர்ஸில் வைத்துவிட்டு, கண்மூடி தலைசாய்த்துக் கொண்டேன். செவ்வானம் இருள ஆரம்பித்த சமயத்தில் செங்கல்பட்டு சென்றடைந்தேன்.
“என்னடி இது.. சொல்லாம கொள்ளாம கெளம்பி வந்து நிக்குற..?” குழப்பமாய் கேள்வி கேட்ட அம்மாவை,
“சும்மாதான்மா வந்தேன்..!! உன் மாப்ளை ஊர்ல இல்ல.. வேலை விஷயமா வெளியூர் போயிருக்காரு.. ரெண்டு நாள் கழிச்சுதான் வருவாரு..!! ரேணுக்காவும் இன்னைக்கு வெளியூர் கெளம்பிட்டாங்க..!! ரொம்ப போரடிச்சது.. அதான்.. உங்களாம் பாக்கலாம்னு கெளம்பி வந்துட்டேன்..!!” என்று சமாளித்தேன்.
“உடம்பு சரியில்லையாடி.. மூஞ்சிலாம் ஒருமாதிரி இருக்கு..?”
அதுலாம் ஒண்ணுல்லம்மா.. பஸ்ல வந்தது.. டயர்டா இருக்கு.. வேறொன்னும் இல்ல..!!”
“ஓஹோ..? சரிடி.. அப்பா இன்னும் வரலை..!! நீ வேணா கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு.. அம்மா சாப்பாட்டுக்கு எழுப்புறேன்..!!”
சொன்ன மாதிரியே இரவு அம்மா எழுப்பினாள். வயிறு சரியில்லை என்று சொன்னாலும் கேட்காமல், நான்கு இட்லிகளை என் வாயில் திணித்தாள். சாப்பிட்டுவிட்டு அவள் மடியிலேயே படுத்து உறங்கிப்போனேன். காலையில் எழுந்தபோது அந்த நான்கு இட்லிகள், உடலுக்கு புது சக்தியை கொடுத்திருந்ததை உணர முடிந்தது. நேற்று இருந்த களைப்பு இன்று காணாமல் போயிருந்தது.
காலையில்தான் அப்பாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்க முடிந்தது. அசோக்குடைய வேலை பற்றி விசாரித்தார். அவரை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். விடுமுறை நாட்களில் நாங்கள் என்ன செய்வோம் என்று கேட்டு அறிந்துகொண்டார். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பழகும் விதம் பற்றி அக்கறையுடன் கேட்டார். இறுதியாக..
“சந்தோஷமா இருக்கேல பவித்ரா..?” என கவலையுடன் கேட்டார்.
“எனக்கென்னப்பா கொறை..? நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்..” என்று நான் சொல்ல, நிம்மதியாய் புன்னகைத்துவிட்டு, நியூஸ் பேப்பரில் மூழ்கினார்.
லக்ஷ்மிப்ரியா என்று எனக்கொரு சினேகிதி இருக்கிறாள். எங்கள் ஊர்தான். பள்ளிப்பருவ சினேகிதி. ஒரு வருடம் முன்னர்தான் அவளுக்கு திருமணமானது. மூன்று மாதத்தில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது. நிறைமாத கர்ப்பிணியாய் தாய் வீட்டுக்கு வந்தபோது அவளை பார்த்தது. குழந்தை பிறந்த பின் சென்று பார்க்கவில்லை. அவளை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று, காலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினேன்.
Iloveyou jayar