ஒரு நாள் கூத்து 2 125

“போங்கன்னு சொல்றேன்ல..?”

நான் காட்டுத்தனமாய் கத்தியதும் அவர் அமைதியானார். எதுவுமே பேசவில்லை. ஆனால் எழுந்தும் செல்லவில்லை. என் அருகிலேயே அமர்ந்திருந்தார். நான் குப்புறப் படுத்து.. முதுகு குலுங்க.. தலையணை நனைக்க.. அவர் எனக்கருகே தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரம்..!! அப்புறம்..

“பவிம்மா..”

என்று அவர் மீண்டும் என் தோள் தொட்டார். இப்போது எனக்கு எரிச்சல் எல்லை மீறிப் போனது. நான் அவ்வளவு சொல்லியும் ஏன் தொந்தரவு செய்கிறார்..? நிம்மதியாக அழக் கூட விட மாட்டாரா..? பட்டென படுக்கையிலிருந்து எழுந்தேன். முகம் முழுதும் கண்ணீரும், ஆத்திரமுமாய் சீறினேன்.

“சொன்னாப் புரியாதா உங்களுக்கு..? ஏன் சும்மா சும்மா..” நான் கத்திக்கொண்டு இருக்கும்போதே,

“பசிக்குதும்மா..!!” என்றார் அவர் பரிதாபமாக.

அவ்வளவுதான்..!!!! சத்தியமாக சொல்கிறேன்.. துடித்துப் போனேன்..!! அத்தனை நேரம் அவர் மீது கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த கோபம், போன இடம் தெரியாமல் பறந்திருந்தது. பாலுக்கழும் குழந்தையை பார்த்த தாயின் மனநிலை, படக்கென என் மனதை வந்து கவ்வியது. எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்த இதயம், அழகு கொஞ்சும் அன்பு நீரோடையாய் மாறிப் போயிருந்தது. இப்போது என் கண்களில் கண்ணீர் அருவி இன்னும் அதிகமாகியிருந்தது. இது வேறு மாதிரியான கண்ணீர்…!! அவர் மீதான காதலும் கனிவும் கலந்து கொட்டிய கண்ணீர்..!! அதிகமாகத்தான் கொட்டும்..!! பதறிப் போனவளாய் சொன்னேன்.

“ஐயோ.. என்னப்பா நீங்க..? பசிக்குதுனா அப்போவே சொல்ல வேண்டியதுதான..? நீங்க பார்ட்டிலயே சாப்பிட்டு வந்திருப்பீங்கன்னு..”

“நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேன்னு தெரியும் பவி.. அதான் சாப்பிடாம வந்துட்டேன்..”

“சரி சரி.. வாங்க.. எடுத்து வைக்கிறேன்.. சாப்பிடலாம்..!!”

நான் அவசர அவசரமாய் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தேன். பரபரப்பாய் கிச்சனுக்கு ஓடினேன். சாதம் ஆறிப் போயிருந்தது. சாம்பாரும், பொரியலும் கொஞ்சமாய் சூடு செய்தேன். ஐந்தே நிமிடத்தில் எல்லாம் ரெடி செய்து டைனிங் டேபிளில் எடுத்து வைத்தேன்.

“ம்ம்.. சாப்பிடுங்க..”

நான் சாதம் பரிமாற, அவர் அவசர அவசரமாய் அள்ளி வாய்க்குள் போட்டார். ரொம்பவும் பசித்து விட்டது போலிருக்கிறது..!!!!! அழுகை வந்தது எனக்கு..!!

“ஸாரிப்பா..!!” என்றேன் அவர் தலையை கோதியவாறு.

“பரவால்ல பவி.. வா.. நீயும் உக்காந்து சாப்பிடு..”

“இல்ல.. நீங்க மொதல்ல சாப்பிடுங்க..”

“ப்ச்.. வான்னு சொல்றேன்ல.. உக்காரு..!!” நானும் அமர, அவரே ஒரு ப்ளேட்டில் சாதம் பரிமாறி சாம்பார் ஊற்றினார்.

“சாப்பிடு..!!” என்றார் கனிவான குரலில்.

நான் சாதத்தை பிசைந்தேன். இருவரும் ஒருவாய் அள்ளி வைத்தபோது.. சுவர்க்கடிகார குருவி புதுவருடம் பிறந்ததை கூச்சலிட்டு அறிவிக்க ஆரம்பித்தது. நானும் அவரும் திரும்பி, வெளியே வந்து கூவிய அந்த குருவியையே சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்புறம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, தெளிந்த மனதுடன் காதலாக புன்னகைத்துக் கொண்டோம். அவ்வளவுதான்.. சாப்பிட ஆரம்பித்தோம்..!!

“நான் சொல்றதை கொஞ்சம் கோவம் இல்லாம கேக்குறியா பவி..?” அவர் மெல்ல ஆரம்பித்தார்.

“சொல்லுங்கப்பா.. எனக்கு இப்போ கோவம்லாம் இல்லை..!!”

“ரேணுகா.. ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணுடி.. பெரிய பணக்கார ஃபேமில பிறந்தவ..!!”

“ம்ம்..”

“அவ ஹஸ்பன்ட் யாருன்னு சொன்னா நீ ஆச்சரியப் படுவ..”

“யா..யாரு..?”