சத்தியமா நீ நினைக்கிற மாதிரி எதுவுமே நடக்கல 4 Like

“ அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே மீரா எனக்கு பிடிக்கலன்னு சொல்லிட்டேன். இனி இதை பத்தி நாம பேச வேண்டாம். ரூமுக்கு போய் மற்றதெல்லாம் பேசிக்கலாம். “

“ என்னாச்சு ராஜி, நீ ஒரு மாதிரி பேசுற. எதாச்சும் பிரச்சனையா. “

“ ஒன்னும் இல்ல மீரா. நான் அப்புறமா எல்லாம் சொல்றேன். கொஞ்ச நேரம் அமைதியா இரு. “

“ சரி ராஜி வேலைய பாரு. “

மேற்கொண்டு மீரா அவளை தொந்தரவு செய்யாமல் வேலையை பார்க்க தொடங்கினாள்.

அன்று கார்த்திக் ஆபிஸ் வராததால் ராஜி அவனை பற்றிய சிந்தனை இல்லாமல் வேலைகளை முடித்தாள். மதியம் சாப்பிடும் போதும் மீராவிடம் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. அரவிந்தும் மீராவும் மட்டுமே பேசிக்கொண்டு இருந்தனர்.

ஈவினிங் இருவரும் ஒன்றாக ரூமிற்கு சென்றதும் மீரா ராஜியிடம் கேட்டாள்.

“ ராஜி உங்கிட்ட கொஞ்சம் பேசணும். “

“ சொல்லு மீரா. “

“ இப்போதுலாம் நீ ரொம்ப மாறிட்ட ராஜி. உன்கிட்ட ரொம்ப மாற்றம் தெரியுது. என்கிட்டே நீ எதையும் சொல்ல மாட்டேங்குற. உனக்கு என்ன பிரச்சனை. “

“ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மீரா. நீயா எதையும் கற்பனை பண்ணிக்காத. “

“ அப்போ ஏன் நீ அமைதியா இருக்க. ஊருக்கு போயிருந்தியே அப்பா என்ன சொன்னாங்க. அந்த அலையன்ஸ் மேட்டர் என்ன ஆச்சு. “

“ அவனை பிடிக்கலன்னு சொல்லிட்டேன். என்னால கார்த்திக்க மறக்க முடியல. “

“ சரி. அதை நீ அப்பா கிட்ட சொல்லிருக்கலாமே. நான் இப்படி ஒருத்தன லவ் பண்றேன்னு. “

“ என்னனு சொல்ல சொல்ற.நான் ஒருத்தன லவ் பண்றேன். ஆனா அவன் என்ன லவ் பண்ணல. என்னால அவனை மறக்க முடியலன்னு சொல்ல சொல்றியா. “

“ நீ சொல்றதும் கரெக்ட் தான். இப்போ என்னதான் பண்ண போற. “

“ குளிச்சிட்டு பிரெஷ் ஆகிட்டு சாப்பிட்டுட்டு நல்லா தூங்க போறேன். “ சொல்லி விட்டு சிரித்தாள்.

“ ராஜி. நீ சீரியசா இருக்கியா இல்ல காமெடி பன்னுரியானு எனக்கு தெரியல. பட் உனக்கு ஏதோ ஒரு பிரச்சனை அதை நீ எனக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிற. அதை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும். “

“ அப்படியா. அப்படி எதாச்சும் பிரச்சனை வந்தா இனிமே முதல்ல உன்கிட்டயே சொல்லுறேன் சரியா மேடம். “ சொல்லிவிட்டு குளிக்க சென்றாள்.

மீராவிற்கு ராஜியின் இந்த போக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் உயிர் தோழி ஆயிற்றே. விட்டு கொடுக்கவும் முடியவில்லை.

ராஜி பாத்ரூம் சென்று ஷவரை திறந்து விட்டு அழுதாள். என்னோட நிலைமை யாருக்கும் வரக்கூடாது. கல்யாணம் ஆனா விஷயத்தை பிரெண்டிடம் கூட சொல்ல முடியாமல், தனக்காக எத்தனயோ நபர்கள் இருந்தும் தன்னுடைய கஷ்டத்தை சொல்ல கூட முடியாமல் இருக்கும் நிலை கண்டு அவள் மேலே அவளுக்கு கோவமாக வந்தது. என்ன மன்னிச்சிடு மீரா. என்னால எதையும் உன்கிட்ட இப்போ சொல்ல முடியாது. சரி. மனதுக்குள் சொல்லிக்கொண்டே மனபாரம் நீங்கும் வரை அழுதாள்.

அன்று இரவு ராஜி மீராவிடம் ஒன்றும் சொல்லாமல் தூங்கி விட மீரா தனது கஷ்டத்தை அரவிந்திடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தாள். ராஜி புரண்டு படுக்க அவளது தாலி செயின் அவளையும் அறியாமல் வெளியே வந்து இருக்க அவள் கைகளை ஒருக்களித்து படுத்து தூங்கி கொண்டிருந்தாள்.

மீரா அரவிந்திடம் பேசிக்கொண்டே ரூமிற்குள் வர ராஜியை பார்த்தாள். அவளை பார்த்து விட்டு அரவிந்திடம் பேசினாள்.

“ இப்போ கூட பாரு அரவிந்த். என்கிட்டே சொல்லாம தூங்கிட்டா. ரொம்ப கஷ்டமா இருக்குடா. “

“ ………. “

“ ஏய் அரவிந்த் ஒரு நிமிஷம். இரு. இரு. …….”

“ ………..”

மீரா மறுபடியும் ராஜியை பார்க்க அவள் கழுத்தில் இருந்த தாலி செயினை பார்த்து விட்டாள்.

“ அரவிந்த் நான் அப்புறமா பேசுறேன். “ போனை கட் செய்து விட்டு ராஜி அருகில் வந்து பார்க்க தாலி செயின் அவள் கழுத்தில் இருந்து வந்து அவள் நெஞ்சில் இருந்தது.

மீரா உடனடியாக தனது போனை எடுத்து ராஜியை ஒரு போட்டோ எடுத்தாள்.

ராஜி நீயா இப்படி. இது தான் உன் பிரச்சனையா. நீ ஊருக்கு போனது இதுக்கு தானா. உனக்கு அப்போ கல்யாணம் ஆகிடுச்சா. யாருடி அது. அப்போ கல்யாணம் ஆகியும் நீ கார்த்திக்க நினைச்சிட்டு இருக்கியா. இருக்காது. கண்டிப்பா நீ அந்த மாதிரி பொண்ணு இல்ல. என்னமோ நடந்துருக்கு.

நான் அன்னைக்கு பார்த்தது அப்போ மஞ்சள் கயிறு தானா. நினைவு படுத்தி பார்த்தாள். ஒரு நாள் ராஜியின் கழுத்தில் மஞ்சள் நிறத்தில் ஏதோ தெரிவது போல தோன்ற மீரா அவளிடம் கேட்டதற்கு ராஜி வேறு எதையோ சொல்லி மழுப்பியது நியாபகத்திற்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *