அவளுக்கும் ஆசை வருமா வராதா Part 3

அந்த சமயம் பார்த்து தாமரை

“அப்படி என்னங்க பலமா யோசிக்கிறிங்க?”

“உன்னைய பத்தி தான் தாமரை.?”

“என்ன பத்தியா? அப்படி என்ன யோசிச்சிங்க..? சொல்லுங்க.”

“உன்ன பத்தி உன் நிலைமைய பத்தி தான்.”

“என்னைய பத்தி அப்படி என்ன யோசிச்சிங்க.?”

“உனக்கு எல்லார மாதிரி வாழ்க்கை வாழனும்.. உனக்கு சில ஆசைகள் இருக்கும்ல.. அத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.”

“நானே இப்படியெல்லாம் யோசித்தது இல்லிங்க.. யோசிச்சா மனசுக்குள்ள குழப்பம் இருந்திட்டே இருக்கும்.. அத பத்தி யோசிக்காம விட்டுட்டா அதுவே தானா சரியா போய்டும்ங்க. அதனாலே நா பெருசா எத பத்தியும் யோசிக்கிறதில்ல” என்றாள் தாமரை..

அவள் சொல்வதும் சரி தான்.. யோசிக்க யோசிக்க மன குழப்பம் தான் அதிகமாகும் தவிர தீர்வு எதுவும் கிடைக்காது.

என் கையில் திறந்தபடி இருந்த ஆல்பத்தை மூடி வைத்துவிட்டு எழ என்னோடு சேர்ந்து தாமரையும் எழுந்துக் கொண்டாள்.

“தாமரை நீ பிரஸ் பண்ணிட்டு குளிக்கனும்னா குளி.. நா கொஞ்சம் வெளியில போய்ட்டு வரேன்.”

“சரிங்க”

“அந்த கதவுல ஒரு ஓட்டை இருக்கும் அது வழியா யாரு பாத்துட்டு கதை திற.. என்னை தவிர வேற யாரும் தெரியாத ஆள் வந்தா திறக்காத.”

“சரிங்க.”

“உன் வீட்டுல எப்படி இருப்பியோ அப்படி இரு. இங்க உன்ன வந்து யாரும் எதுவும் கேட்கமாட்டாங்க.. தொந்தரவு பண்ணமாட்ங்க.”

“ம்ம்.. சரிங்க.. நீங்க போய்ட்டு வாங்க.” தாமரை சொல்ல என் வீட்டை விட்டு வெளியே வந்து என் ப்ளாக்கிற்கு எதிரே இருந்த மரத்தடியில் நின்றுக் கொண்டிருந்த காரின் மேல் மூடியிருந்த கவரை எடுத்து தூசி தட்டி நன்றாக துடைத்து விட்டு ஒரு மாதத்திற்கு பின் அதை வெளியே எடுத்துக் கொண்டு செல்கிறேன். அபார்மெண்ட் மெயின் கதவு பூட்டி இருக்க ஹாரன் அடிக்க வாட்ச்மேன் வேகமாக எழுந்து கதவை திறந்துவிட்டான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு என் மனதிற்கும் உடலிற்கும் ஏதோ புதுமையான புத்துணர்ச்சி வந்தது போல் என்னால் உணர முடிந்தது. அதற்கு காரணம் தாமரை தான் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. அவளாக கூட இருக்கலாம்.. இல்லை அவளுடைய செய்கைகளாக கூட இருக்கலாம்.. இதையெல்லாம் மனதில் யோசித்தபடியே நான் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தேன்..
அங்கு நான் வேலை விசயமாக பார்க்க வேண்டிய ஆளுக்காக சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின் அந்த ஆளிடம் வேலை விசயமாக என்னுடைய சந்தேகங்களை எல்லாம் கேட்டு தெரிந்துக் கொண்டு அதே சமயம் அவருக்கும் வேலை பற்றி புரிய வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

காரை மகாபலிபுரம் செல்லும் சாலையில் திருப்பும் போது என்னுடைய நினைவுகளும் எனக்குள் திரும்பி வந்தன. நானும் அகல்யாவும் திருமணம் ஆன புதிதில் இந்த ரோட்டில் இதே காரில் பயணித்திருக்கிறோம். அவளுக்கு பழங்கால சிற்பங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனாலே ஹனிமூனிற்கு மகாபலிபுரம் போகலாம் என தன்னுடைய முதல் விருப்பத்தை என்னிடம் தெரிவித்தாள். அவளின் ஆசையை சொன்னது ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் ஹனிமூனிற்கு மகாபலிபுரமா என யோசிக்கவும் செய்தேன்.. பின் அவளின் விருப்பத்தை நிறைவேற்றலாம் முடிவு செய்து இதோ இதே சாலையில் அன்று இருவரும் பயணித்தோம்..

காரில் வரும் போது அங்கு இருக்கும் சிற்பங்கள் பற்றியும் அது எப்போது எப்படி அமைக்கபட்டது என ஒவ்வொன்றாக விடாமல் சொல்லிக் கொண்டே வந்தாள். அங்கிருக்கும் சிற்பங்களின் அழகை பற்றி சொல்லும் போது

நான் “அந்த சிற்பம் அவ்வளவு அழகாவா இருக்கும்?” கேட்க

அதற்கு அவள் “அட ஆமாங்க நீ பாக்க தான போறிங்க.. பாத்ததும் நீங்களே அழகா இருக்கு சொல்வீங்க பாருங்க” என்றாள்..

“அப்படியே அந்த சிற்பம் அழகா இருந்தாலும் அழகு சொல்லமாட்டேன்.” என்றதும்,

என்னை திரும்பி பார்த்து, “ஏன்பா அழகாக இருக்கு சொல்லமாட்டிங்க?” கேட்க

“அங்கிருக்கிற சிற்பத்த விட அழகான சிற்பம் பக்கத்தில இருந்தா அது எப்படி அழகா தெரியும். நீயே சொல்லு.”

“நீங்க ஏதோ டபுள் மினிங்ல பேசுற மாதிரி தெரியுது. பேச்ச விடுங்க.. எப்ப பாரு அதே நெனப்பு தான்” முனுமுனுத்துக் கொண்டே வந்தாள் அகல்யா.

“ஹேய் நா ஒன்னும் டபுள் மினிங்க்ல பேசுல. சிங்கிள் மீனிங்க் தான். பட் இன்டேரக்ட் மீனிங்க் அவ்வளவு தான்.”

“அதுக்கு தான் நானும் அமைதியா வரேன்.”

“ஏய் இப்ப என்ன சொல்லிட்டேன். இப்படி உம்முனு வர” நான் கேட்க

“அதலாம் ஒன்னுமில்ல.. நீங்க ரோட்ட பாத்து ஓட்டுங்க.”

“ஒன்னுமில்ல சொல்ற. ஏன் மூஞ்சிய அந்த சைட் திருப்பி வச்சியிருக்க.?”

“ம்ம்.. சும்மா தான்”

“நா சொன்னத தப்பா புரிஞ்சிகிட்ட நெனக்கிறேன்” சொல்லிவிட்டு அதன் பின்பு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரும் உள்ளே சென்று சிற்பங்களை பார்க்கும் போது அகல்யாவின் காதில்

“மனிதன் செதுக்கிய சிற்பத்தை பிரம்மன் செதுக்கிய சிற்பம் பார்க்கும் போது என் மனதில் மனிதனை விட பிரம்மன் அழகாக செதுக்கிவிட்டான் என நினைக்க தோன்றுகிறது” என்றேன்.

நான் சொன்னதை கேட்டதும் வெட்கத்தில் தலை குனிந்தபடி நடந்தாள்.. நானும் அவளின் பின்னாலே அங்கிருந்த ஒவ்வொரு சிற்பமாக பார்த்துக் கொண்டே சென்றேன்.. அப்போது ஒரு பெண் நடனம் ஆடுவதை கல்லில் தத்துரூபமாக செதுக்கியிருந்தனர். அதை பார்த்ததும் அங்கே நின்றுவிட்டேன்.. ஒரு பெண்ணின் அழகு மொத்தையும் ஒற்றை கல்லில் செதுக்கிவிட முடிகிறது என்றால் அவள் எப்போதுமே ஒரு ஆச்சரியக்குறி தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *