எதிர் முனையில் “மேடம், நான் சரணோட அக்கா பேசுறேன்..” என்க, நான் “சொல்லுங்க.. என்ன விஷயம்?” என்றேன்.
“மேடம் சரணோட டியூசன் விஷயம்தான்.. அவனை எப்போதிருந்து டியூசன் வரச்சொல்ல டீச்சர்?” என்றாள் சரணின் அக்கா.
அதைக் கேட்டதும் என் முகம் மாறியது. சரணைப் போல ஆர்வமே இல்லாத ஒருவனுக்கு டியூசன் எடுப்பதாக அவசரப்பட்டு சொல்லிவிட்டோமோ என்று நினைத்துக்கொண்டே மௌனமாக நடந்துகொண்டிருந்தேன்.
ஆனால் எதிர்முனையில் சரணின் அக்கா “ஹலோ.. மேடம்.. என்ன மேடம் யோசிக்கிறிங்க?” என்று கேட்க, நான் என்ன சொல்வதென்றே தெரியாமல், “ஒரு சின்ன வேலை இருக்கும்மா.. கொஞ்ச நேரத்துல நானே உனக்கு கால் பண்றேன்..” என்று அவளை சமாளித்து போன் காலை கட்செய்துவிட்டு ஸ்கூலை நோக்கி நடந்தேன்.
அன்று எனக்கு முதல் வகுப்பே 12th-B பிஸிக்ஸ் க்ளாஸ் என்பதால் ஸ்கூலுக்கு போனதும் என்னுடைய நோட்ஸ்களை எடுத்துக்கொண்டு க்ளாஸூக்கு சென்றேன். வகுப்பறைக்கு போனதும் என் கண்கள் முதலில் சரணைத்தான் தேடியது. அவன் கடைசி பெஞ்சில் அப்பாவியாக உட்கார்ந்திருந்தான்.
அவனைப் பார்த்ததும் எனக்கு பல யோசனைகள் என்னையும் அறியாமல் உதயமாக ஆரம்பித்தது. அன்று நான் பாடம் எடுக்கும்போதெல்லாம் என் பார்வை அடிக்கடி சரணின் மேல் விழுந்தது.
ஒருவழியாக அன்றைக்கு பாடத்தை முடித்துவிட்டு, நான் சரண் பக்கம் சென்றேன். நான் அவன் பக்கம் சென்றதும் அவன் மரியாதையாக எழுந்து நின்றான். அப்பாவியாக என் முகத்தைப் பார்த்தான்.
அவனைப் பார்த்ததும் எனக்கு வார்த்தையெல்லாம் மறந்து விட்ட மாதிரி, என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அதனால் அவனிடம் “சரண், இன்ட்டர்வலில் என்னை வந்து பாரு..” என்று சொல்லிவிட்டு வகுப்பு முடிந்ததும் Staff Room-க்கு சென்றுவிட்டேன்.
Staff Romm-க்கு சென்றதிலிருந்தே நான் சரணின் ஞாபகமாகவே இருந்தேன். ஒரு ஜடத்தைப் போல இருக்கும் அவன் செய்கை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் அவன் அக்கா என்னிடம் கெஞ்சியதையும் மறக்க முடியவில்லை.
“இது என் ஆசிரியர் தொழிலுக்கு வந்த சோதனையோ?” என்று நினைத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே, நாற்காலியில் அமர்ந்தபடி மேஜையில் தலைவைத்து சாய்ந்துவிட்டேன். என் நினைவில் சரணின் அக்காவின் அழுகையும், சரணின் ஒன்றுக்கும் உதவாத அப்பாவி முகமும் அடிக்கடி வந்து செல்ல, நான் என்ன முடிவெடுப்பது என்ற குழப்பத்தில் என்னையும் மறந்திருந்தேன்.
அதற்குள் அடுத்த வகுப்பு முடிந்து இன்ட்டர்வல் வந்துவிட “டீச்சர்..” என்ற குரல்கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். சரண்தான் வந்திருந்தான்.
நான் அவனைப் பார்த்ததும் “டீச்சர், இன்ட்டர்வல்ல வந்து பாக்கச் சொன்னீங்க?” என்று பவ்யமாக சொன்னான்.
அதுவரை சரணைப் பற்றி எனக்கு எந்த முடிவும் எட்டாத நிலையில், இப்போது அவனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனமாக இருந்தேன். அவனும் என் பக்கத்திலேயே பவ்யமாக நின்றுகொண்டிருந்தான்.